X

விஜய் சங்கருக்கு கடைசி ஓவர் வழங்கப்பட்டது டோனியின் யோசனை – கோலி தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

நாக்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது.

விராட்கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 120 பந்துகளில் 116 ரன்னும் (10 பவுண்டரி), விஜய்சங்கர் 41 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கும்மின்ஸ் 4 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 242 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இந்திய அணி 8 ரன்னில் வெற்றி பெற்றது. ஸ்டோனிஸ் 52 ரன்னும், ஹேண்ட்ஸ்ஹோம் 48 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, விஜய்சங்கர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

தமிழக வீரர் விஜய்சங்கரின் கடைசி ஓவர் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது.

நிலைத்து ஆடிய ஸ்டோனிசை முதல் பந்திலேயே அவர் அவுட் செய்தார். சர்வதேச போட்டியில் விஜய்சங்கர் பெற்ற முதல் விக்கெட் ஆகும். 2-வது பந்தில் ஆடம் ஜம்பா 2 ரன் எடுத்தார். 3-வது பந்தில் ஆடம் ஜம்பா ஆட்டம் இழந்தார். விஜய் சங்கரின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

ஆட்டத்தின் 46-வது ஓவரிலேயே விஜய்சங்கரை பந்துவீச அழைக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் டோனி, ரோகித்சர்மாவிடம் கலந்து ஆலோசித்தபோது அவர்கள் வேண்டாம் என்றனர்.

கடைசி ஓவரை விஜய் சங்கருக்கு கொடுக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். முகமது‌ஷமி, பும்ரா முதலில் பந்துவீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தட்டும். அவர்கள் ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தால் நாம் முன்னிலைக்கு வந்துவிடுவோம் என்றனர்.

அது தான் மிகச்சரியாக நடந்தது. கடைசி ஓவரை விஜய் சங்கர் அற்புதமாக வீசினார். துணை கேப்டன் ரோகித்சர்மாவுடன் களத்தில் ஆலோசனை செய்வது ஆரோக்கியமாக இருக்கும். டோனி எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்.

நான் பேட்டிங் செய்ய சென்றபோது சூழ்நிலை கடினமாகவே இருந்தது. கடைசி வரை நின்று ஆடுவது என்று நினைத்தேன். எனது ஆட்டம் பெருமை அளித்தது. விஜய்சங்கரும் பிரமாதமாகவே ஆடினார். ஆனால் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆகிவிட்டார். இந்த வெற்றி எங்களது தன்னம்பிக்கையை அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது போட்டி வருகிற 8-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.