X

விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் ஏரியா வினியோகஸ்தர்கள் கவுன்சில் இணைந்து பங்கு பெற்ற அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திரைப்படங்கள் வெளியிடும்போது ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிபடுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ராகவாலாரன்ஸ் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

மற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. சேலம் ஏரியாவில் வியாபாரம் ஆகாத, வெளியிட இயலாத சிறு முதலீட்டு திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் நலன் கருதி சேலம் திரைப்பட வினியோகஸ்தர்கள் கவுன்சிலே பொறுப்பேற்று 3 சதவீத சர்வீஸ் சார்ஜ் மட்டுமே பெற்றுக்கொண்டு ரிலீஸ் செய்து தருவதாக தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது”.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.