விஜய்க்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பை தொடர்ந்து லியோ படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு, யாரும் எதிர்பாராத சமயத்தில் மிகவும் சர்பிரைசாக வெளியானது.
தற்போதைக்கு “தளபதி 68” என்று அழைக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். லியோவை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க துவங்கிவிட்டது. மேலும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற விவரங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பிரியண்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் 2024 வாக்கில் வெளியாக இருக்கிறது.