Tamilசெய்திகள்

விஜயை தமிழக அரசு பழிவாங்குகிறது – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்து கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும்.
செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது. அதிகாரத்திலுள்ள திமிரில் போலீஸ் நிலையத்தில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்குநேரியில் கவனமாக பேசியிருக்க வேண்டும். மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. ஆனால் இனம் என்பது மாறமுடியாது. அமைச்சர் என்பவர் கண்ணியத்தோடும், கட்டுப்பாடோடும் பேச வேண்டும். வாக்கு செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என எல்லோருக்கும் சேர்த்து தான் அவர் அமைச்சர். எனவே அவர் அப்படி பேசியிருக்க கூடாது.
கோதுமை, பார்லி உள்ளிட்ட பொருளுக்கு அகவிலை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை,எளிய மக்களுக்கு ஏற்புடையதல்ல. வரிவிதிப்பு நாட்டை குட்டி சுவராக்கி விட்டது. வரிவிதிப்புக்கு எதிராக நாங்கள் போராடியபோது தேசத்துரோகி என்று கூறினார்கள். வாங்கும் திறனற்ற மக்களாக நம்மை மாற்றிவிட்டார்கள். பண்டிகை நாட்களில் 200 சதவீதம் விற்பனையான இடத்தில் தற்போது 80 சதவீதம் தான் விற்பனையாகிறது. அடித்தட்டில் உள்ள 60 சதவீத மக்களை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது களையப்பட வேண்டும். மனிதர்கள் எல்லோரும் சமமென்பது கல்வியில் இருந்தே நாம் கற்பித்து வர வேண்டும். அதை நோக்கி அரசு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *