விஜயுடன் மோத ரெடியான சூர்யா!
முந்தைய வருடத்தை விட இந்த வருடம் பெரிய நடிகர்கள் படங்கள் அதிகம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த பட்டியலில் ரஜினிகாந்தின் தர்பார், கமல்ஹாசனின் இந்தியன்-2, விஜய்யின் மாஸ்டர், அஜித்குமாரின் வலிமை, சூர்யாவின் சூரரை போற்று கார்த்தியின் சுல்தான் படங்கள் உள்ளன.
இவற்றில் மாஸ்டர், சூரரை போற்று ஆகிய 2 படங்களையும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 25-ந்தேதி ஒன்றாக வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களுமே நல்ல வசூல் பார்த்தன.
இதுபோல் தமிழ் புத்தாண்டில் விஜய்-சூர்யா படங்கள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சென்னையில் ஜெயில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். ஜெயில் அரங்கில் விஜய்-விஜய் சேதுபதி மோதும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர். அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டுள்ளனர்.
இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சூரரை போற்று படம் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடியாததால் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர்.