விஜயின் ‘லியோ’ பட பாடலை தடை செய்ய கோரி வழக்கு
விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடி” பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆண்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.
தமிழக அரசும் காவல்துறையும் போதை பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில் ரவுடிசத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.