விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். அரபி குத்து என்ற பெயரில் வெளிவந்த இந்த பாடல் வரிகள் கீப்ரு மொழியில் தொடங்கி எழுதபட்டிருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். பாடல் வெளியான இரண்டு தினங்களில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். கூடவே திரையுலக முன்னணி நடிகைகள் கூட இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே ஆடியது போலவே நடனம் ஆடி வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்தனர். சமந்தா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா என்று பலரும் நடனம் ஆடியிருந்தனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாலைவனத்தில் ஒட்டகங்களோடு அரேபியர்கள் நடனம் ஆடியது மிகப்பெரிய வைரலானது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பாடல் எழுதி வந்திருக்கிறார். அதே போல இந்த படத்திலும் எழுதியிருக்கிறார். இப்படி அவர் எழுதுவதற்குக் கிடைக்கும் சம்பளத்தை பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்து விடுவது வழக்கம்.
இந்த பாடல் உலக அளவில் டிரெண்டிங் ஆனதால், ரசிகர்கள் பலரும் இணையத்தில் இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தனர். அதில், மலம பித்தா பித்தாப்பு என்கிற வரிக்கு என்னை குற்றம் சாட்டாதே என்று அர்த்தம் வருவதாக கண்டு பிடித்தனர். இந்த அளவுக்கு ஒரு பாடலை ஆய்வு செய்தது எந்த படத்திற்கும் நடக்க வில்லை. இந்த நிலையில்தான் டிரைலர் வெளியாகும் நாளை ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருந்தனர். டிரைலரையே திரையரங்குகளில் திரையிட்டு ரசிக்கும் வழக்கம் தற்போது பரவியிருப்பதால் ஒவ்வொரு ஊரிலும் திரையரங்குகளில் பீஸ்ட் டீசர் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
திரைப்படத்திற்கு இருக்கும் அதே ஆர்வத்தோடு ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்க கொடிகளை கைகளில் பிடித்தபடி டிரைலரை பார்க்க குவிந்தனர். இந்த காட்சிகளுக்கு குறைந்தபட்சம் 20 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது. டீசரைப் பார்க்க அரங்கு நிறைந்த காட்சிகளாக ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்த நேரத்தில் ஏற்பட்ட உற்சாக மிகுதியில் திருநெல்வேலி ராம் திரையரங்கில் ரசிகர்கள் இருக்கைகளை சேதப்படுத்திய சம்பவமும் நடந்தது. இந்த சம்பவத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பிலும், இன்னும் சில தரப்பிலிருந்தும் கன்டனங்கள் எழுந்தன. ஆனால் இதுபோன்ற உற்சாக கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாதது என்று சமாதானபடுத்தப்பட்டது.
தற்போது படம் ஏப்ரல் 13-ந்தேதி வெளியாக இருப்பதால் இதனை கொண்டாட்டத்துடன் வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். திரையரங்கம் முன்பு கட்அவுட் அலங்கார வளைவுகள் அமைப்பதும், தோரணங்கள் கட்டுவதும் இப்போதே நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் நாள் 1000 திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்புக் காட்சிக்கும் அனுமதி பெற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மக்கள் நலப்பணிகளிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு மரியாதை செய்தனர்.
அதோடு தங்கள் பகுதியில் இருக்கும் முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு சத்தான உணவு வழங்கி இருக்கிறார்கள். தொடர்ந்து தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல் அமைக்கும் பணியிலும் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு அருகிலும், மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர்ப் பந்தலை அமைக்க வேண்டும் என்று தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுவாக சித்திரை மாதம் திருவிழாக் காலம், இதில் பீஸ்ட் வெளியாவதால் இரட்டிப்பான கொண்டாட்டத்திற்கு விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.