பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி ‘தேவி 2’, ‘வீரமே வாகை சூடும்’, அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஜானர்லிஸ்ட் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் மாநகர போக்குவரத்து ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வருகிறார்.
டிம்பிள் ஹயாதிக்கும் போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டேவுக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பானது. ராகுல் ஹெக்டேவின் காரை டிம்பிள் ஹயாதி தனது காலால் எட்டி உதைத்ததுடன் டிம்பிள் ஹயாதியின் வருங்கால காதல் கணவர் டேவிட், தனது காரை பின்னால் எடுத்து மோதி சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் கார் டிரைவர் புகார் அளித்தார். இதையடுத்து டிம்பிள் ஹயாதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் வழக்கை எதிர்த்து டிம்பிள் ஹயாதி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். போலீஸ் அதிகாரியின் நெருக்கடியால்தான் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் என் மீது தவறான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். டிம்பிள் ஹயாதியின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்ததுடன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டார்.