விசாகப்பட்டினம் தொழிற்சாலை ரசாயன வாயு கசிவு விபத்து – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. காற்றில் கலந்த விஷவாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர்.

சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேர் சிறிது நேரத்திலேயே மரணம் அடைந்தனர். அதன்பின்னர் 5 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.

வாயுக்கசிவு காற்றில் வேகமாக பரவியதையடுத்து, ஆலையை சுற்றி 3 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். பொதுமக்கள் ஈரமான முகக்கவசங்களை அணிந்து தற்காத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news