X

விக்ரம் லேண்டர் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டதா?

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவுக்கு அருகே தென்துருவத்தில் 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் தரையில் லேண்டர் விழுந்து கிடப்பதை சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தது.

ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா, விழுந்து கிடக்கும் லேண்டரை படம் (தெர்மல் இமேஜ்) எடுத்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக எந்தவித புகைப்படமும் வெளியிடப்படவில்லை.