விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. செப்டம்பர் 7-ம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது. இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது.
இந்நிலையில், விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது தொடர்பான தகவலை ஏற்கனவே இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், மற்றவர்களின் ஆய்வை நாங்கள் சரிபார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.