Tamilசெய்திகள்

விக்ரம் லேண்டரின் ஆண்டெனாக்களை மாற்றியமைக்க இஸ்ரோ முடிவு

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நிலவின் தென்துருவப்பகுதியில் திட்டமிட்டிருந்தபடி மெல்ல மெல்ல தரை இறங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது ஒட்டுமொத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் பேரதிர்ச்சியைத் தந்து விட்டது.

அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் என்ன ஆனது என தெரியாமல்போனது.

ஆனால், தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடப்பது தெரிய வந்தது.

அந்தக் காட்சி அடங்கிய தெர்மல் படம் ஒன்றை, நிலவை வெற்றிகரமாக சுற்றி வந்து கொண்டிருக்கிற சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் பிடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ நேற்று மீண்டும் உறுதி செய்தது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சந்திரயான்-2 விண்கல திட்டத்துடன் தொடர்புடைய இஸ்ரோவின் மூத்த அதிகாரி கூறும்போது, “ஆர்பிட்டர் கேமராவில் இருந்து வந்த படங்கள், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் ஒற்றை துண்டாக கிடப்பதை காட்டின. துண்டு துண்டாக உடைந்து விடவில்லை. அது சாய்ந்து கிடக்கிறது. அது வழக்கம்போல தனது 4 கால்களில் நிற்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “விக்ரம் லேண்டர் தலைகீழாக இல்லை. தன் நிலையிலேயே கிடக்கிறது” எனவும் கூறினார்.

அதே நேரத்தில் அந்த அதிகாரி, விக்ரம் லேண்டரின் நிலை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இணைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் ஆயுள் 14 நாட்கள்.

இந்த 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த முடியுமா என்பதுதான் இப்போது விஞ்ஞானிகள் முன் உள்ள சவால்.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் கே. சிவன் கடந்த சனிக்கிழமை மாலை கூறுகையில், “14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ முயற்சிக்கும்” என கூறியது நினைவுகூரத்தக்கது.

ஏற்கனவே 4 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் 10 நாட்கள் கைவசம் உள்ளன. இந்த 10 நாட்களில் விக்ரம் லேண்டருக்கு உயிர் கொடுத்து தகவல் தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பு இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் உள்ளது.

தகவல் தொடர்பினை மீட்டெடுக்கிற வகையில் விக்ரம் லேண்டரின் ஆன்டெனாக்களை மாற்றி அமைக்க முடியுமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விக்ரம் லேண்டர் எப்படி விழுந்து இருக்கும் என்பது பற்றி இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “விக்ரம் லேண்டர் கீழ் நோக்கி வந்தபோது, வேகத்தைக் குறைத்துக்கொள்ளுகையில் சென்சார் அல்லது லேண்டரின் சாப்ட்வேர் அல்லது கம்ப்யூட்டர் ஒழுங்கின்மையால், அது விழுந்திருக்கக்கூடும்” என்றார்.

இருப்பினும் என்ன தவறு நேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆராய்ந்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து விரைவில் பதில்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *