டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து வந்தது. விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். 2019-இல் தொடங்கப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு போன்ற பல காரணங்களால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நடைப்பெற்ற வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து உருக்கமான பதிவின் மூலம் குறிப்பிட்டுள்ளார். அதில், கிட்டத்தட்ட 3 வருட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. சியான் விகரம் சார் மற்றும் என்னை நம்பி, என்னுடன் அனைத்து போராட்டங்கள் மற்றும் கடினமான காலங்களில் பயணம் செய்து கோப்ரா மீது நம்பிக்கை கொண்ட எனது ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டு அதனுடன் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.