விக்கிரவாண்டி, நாங்குநேரில் இடைத்தேர்தல் – பார்வையாளர்களாக ஆந்திராவை சேர்ந்த அதிகாரிகள் நியமனம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக் கிழமை (இன்று), ஞாயிற்றுக் கிழமையும் கிடையாது. தேர்தலுக்கு எவ்வளவு கம்பெனி துணை ராணுவத்தினரை அழைக்க வேண்டும் என்பது பற்றி போலீசார் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
தேர்தல் பொதுப்பார்வையாளராக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு ஆந்திராவைச் சேர்ந்த வி.சின்னவீர பத்ருடு, நாங்குநேரி தொகுதிக்கு எம்.விஜயசுனிதா ஆகியோர் பொதுப்பார்வையாளராக வருவார்கள்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற பொதுவான கணக்கை நிர்ணயித்திருக்கிறோம். ஆனாலும் 1,400 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளும் உள்ளன. நமது மாநிலத்தில் இருந்து சட்டசபைத் தேர்தல் நடக்கும் அரியானா, மராட்டிய மாநிலத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையத்துக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை அளித்திருக்கிறோம்.
விக்கிரவாண்டி தொகுதி இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1.63 லட்சம் பணம், உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும்படையினரால் பிடிபட்டுள்ளது.
வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்தில் 12 லட்சத்து 11 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 1.40 லட்சம் பேர் திருத்தங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் விவரங்களை சரிபார்த்த பிறகு சான்று ஒன்று அதற்கான செயலிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எம்.பி. தேர்தலுக்கு வைக்கப்பட்டிருந்த வாக்காளர் பட்டியலை இந்த இடைத் தேர்தலுக்கும் பயன்படுத்தப் போகிறோம். ஆனாலும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் துணைப் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.