Tamilசெய்திகள்

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக தீவிரம்

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி வருகிற 14-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும்.

தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகிறது. இதில் தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது நாளைக்குள் (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தி.மு.க.வில் ‘சீட்’ கேட்டு அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய பிரிவு செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ஆகிய 4 பேர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ஆகிய 4 பேர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி முயற்சி செய்திருந்தும் அவருக்கு அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதனால் இடைத்தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற முனைப்பில் இப்போது கவுதம சிகாமணி ‘காய்’ நகர்த்தி வருகிறார். ஆனால் இவரைப் போல் கட்சியில் முக்கியஸ்தராக இருக்கும் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரனும் எம்.எல்.ஏ. சீட் கேட்டு வருகிறார். இதில் ஜெயச்சந்திரனுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இதேபோல் அ.தி.மு.க.வில் கடந்த முறை போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 2021 தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்று கடும் போட்டியை உருவாக்கி இருந்தார். அதாவது 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா கட்சிகள் இணைந்திருந்தது. அதன் பிறகு இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலும் பா.ம.க.வும் வேட்பாளரை களம் இறக்குகிறது.

பா.ம.க. சார்பில் சிந்தாமணி புகழேந்தி ஏகமனதாக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் ஏற்கனவே போட்டியிட்ட ஷீபா ஆஸ்மியை வேட்பாளராக நிறுத்தும் என தெரிகிறது. விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறது. அப்போதுதான் வெற்றி எளிதாக கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 72,188 வாக்குகளும், அ.தி.மு.க. 65,365 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 8,352 வாக்குகள் வாங்கி உள்ளது. இதையெல்லாம் கணக்கு போட்டு பார்க்கும்போது 4 முனை போட்டி நிலவினால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பா.ம.க. நிறுத்தும் வேட்பாளரை பொறுத்து அரசியல் களம் மாறுபட வாய்ப்பு உள்ளது.

தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க 15 அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நியமிக்க கூடும் என தெரிகிறது. எனவே விக்கிரவாண்டி தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை நிறுத்த தீவிர பரிசீலனையில் இறங்கி உள்ளது.