Tamilசெய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக 56 வேட்பாளர்கள், 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும். எனவே வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெற முன்வராத நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் ஒன்றிரண்டு பேர் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என தெரிகிறது. அதன்பிறகு தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.