பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்ட, அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு கொண்ட சி.அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண். அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல என்பதை அத்தொகுதி மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு எத்தகையதாக இருக்கும் என்பதற்கு திமுக அலுவலகங்களில் திருப்பி வீசப்படும் பொருள்கள் தான் சான்று ஆகும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்களை என்னால் பட்டியலிட முடியும். அவற்றில் சிலவற்றை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறியது. சாதாரண மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது. நியாய விலைக்கடைகளில் மக்களின் அடிப்படைத் தேவையான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தியது.
தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது. தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கான சட்டத்தை கொண்டு வராதது, தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்ப்பது, அரசு பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மறுப்பது என்று தி.மு.க. அரசின் வேதனைப் பட்டியல் இன்னும் நீண்டது ஆகும். தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவது தான் அந்த அதிர்ச்சி வைத்தியம் ஆகும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கும் தோல்வி தான் அதன் அகங்காரத்தையும், மக்கள் விரோத மனநிலையையும், சமூக அநீதி மனப்பான்மையையும் தகர்க்கும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி, சமூக நீதியின் வெற்றி.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.