விக்கிரவாண்டியில் நாளை 9 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனையில் ஈடுபடும் திமுக
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க தி.மு.க. சுறுசுறுப்புடன் தயாராகி உள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 10 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் 9 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒவ்வொரு ஒன்றியத்தையும் தனித்தனியாக கவனிப்பதற்காக தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் பணிக்குழுவினர் நாளை விக்கிரவாண்டியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். அங்குள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 9 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை மேற்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பிரசாரங்களை மேற்கொள்வது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.