விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த தேர்தலுடன் சேர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை நடத்த முடியாமல் போனது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற 10-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் உள்ள பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஆனால், இடையில் கடந்த மாதம் 20-ம்தேதி முதல் 29-ம்தேதி வரை தமிழக சட்டசபையும் கூடியதால், விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்காமல் இருந்து வந்தது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில், தற்போது அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அமைச்சர்கள் பலர் அங்கு முகாமிட்டு தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுவது சந்தேகம் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில், விக்கிரவாண்டி தொகுதியில் வேன் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.