பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாட்கள் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். முதல் நாளான நேற்று கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தின்போது, மேடையில் வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, அந்த வாஷிங் மெஷினில் கருப்பு துணியை போட்டால் வெள்ளையாக மாறும் என்று கூறி, ஒரு துணியை போட்டு, வெள்ளை துணியை எடுத்து காட்டுகிறார். அப்போது “வாஷிங் மெஷின் பாஜக” என திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “பாஜக வாஷிங் மெஷினாக மாறிவிட்டது. ஊழல் செய்தவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் பட்டியலை தயார் செய்தால், அவர்கள் அனைவரும் அங்கே (பா.ஜ.க.வில்) இருப்பதை பார்க்கலாம்.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய அவர்களின் பிரசங்கங்களை நான் கேட்க வேண்டுமா? முதல்வரின் உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.