Tamilசெய்திகள்

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம் இங்கிலாந்து நாட்டில் வெற்றி

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்த முயற்சித்து வருகின்றன. வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை மிகப்பெரிய அளவில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சோதனை முயற்சியில் சுமார் 2,900 பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் சராசரியாக 4 நாட்களில் 34 மணி நேரம் வேலை பார்த்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர். சோதனை முயற்சியில் ஈடுபட்ட 61 நிறுவனங்களில் 92 சதவீதம் பேர் அத்திட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் சிறந்த வேலை, வாழ்க்கை சம நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிட்டிசன்ஸ் அட்வைஸ் கேட்ஸ்ஹெட்டின் தலைமை அதிகாரி பால் ஆலிவர் கூறும்போது, இந்த திட்டத்தால் வேலை தக்க வைத்தல், ஆள் சேர்ப்பு மேம்பட்டுள்ளது. நோய் நிலைகள் குறைந்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை ஊழியர்கள் செய்து வருகிறார்கள் என்றார்.