வாடிக்கையாளர் கேள்விக்கு அதிரடி பதில் அளித்த ரயில்வே!
இந்திய ரெயில்வேயில் பயணம் செய்ய வேண்டி ஆன்லைன் மூலம் புக் செய்வதற்காக செல்போனில் ரெயில்வே ஆப் உள்ளே சென்றிருக்கிறார் ஆனந்த்குமார். அப்போது விளம்பரங்கள் வந்துள்ளது. இந்த விளம்பரங்கள் ஆபாசமாக இருந்துள்ளது.
இதனையடுத்து ஆனந்த், ரெயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி பதில் பகுதியில் செல்போனில் இருந்த படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சுட்டிக்காட்டி, ‘பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மிகவும் ஆபாசமான, மோசமான விளம்பரங்கள் தொடர்ச்சியாக காட்சியாகிறது. இது அருவருப்பாகவும், எரிச்சல் மூட்டுவதாகவும் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரெயில்வேத்துறை ஆனந்தின் மூக்கை அறுப்பதுபோல், ‘இந்திய ரெயில்வே விளம்பரங்களுக்காக கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்துகிறது. பயனாளர்களை தக்க வைத்துக் கொள்ள குக்கீஸினை பயன்படுத்தும். உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை பொருத்தே இந்த விளம்பரங்கள் காட்சியாகும்.
இதுபோன்ற விளம்பரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை தயவுசெய்து அழித்து விடுங்கள்’ என அதிரடியாக கூறியுள்ளது. இந்த கேள்வி பதில் அடங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.