வாடகை தாய் சட்டத்தை நயன்தாரா மீறினாரா? – கஸ்தூரி பதிவால் பரபரப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.

இந்நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு மேலும் பல சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா? அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு உடல் ரீதியான குறைபாடு இருந்ததா? என்பது பற்றி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools