சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 1500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் மாத வாடகை அடிப்படையில் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.
இந்த வருமானத்தை பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காலகட்டத்தில் பல வியாபாரிகள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருந்தனர்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை கண்டறிந்து வேறு வியாபாரிகளுக்கு வாடகைக்குவிடவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் அதிக அளவில் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வருமானம் கிடைத்து வந்தது.
கவுன்சிலர் பதவி காலியாக இருந்த நேரத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் பலர் கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் முறையாக வாடகை செலுத்தி வந்த பலர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வாடகை செலுத்து வதை கைவிட்டனர்.
இதற்கிடையே கொரோனா தொற்று குறைந்து கடைகள் திறக்கப்பட்ட போதிலும் பல கடைகளின் வியாபாரிகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை செலுத்தவில்லை. 3 ஆண்டுகளுக்கு மேல் வாடகை செலுத்தாமல் இருந்த 400-க்கும் மேற்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு ரூ.1.5 கோடி ரூபாய் வாடகை பாக்கி வசூலாகி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாத மேலும் 400 கடைகளின் பட்டியலை தயாரித்து உள்ளோம். ஓரிரு வாரங்களில் முழுமையான வாடகையை செலுத்த இந்த கடைகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வாடகையை செலுத்தாவிட்டால் இந்த 400 கடைகளும் மூடி சீல் வைக்கப்படும்.
மேலும் அவர்களிடம் இருந்து கடையை பறித்து வேறு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே வியாபாரிகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை முழுமையாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.