Tamilசினிமா

வாடகைத்தாய் விவகாரம் – நயன்தாராவிடம் நேரில் விசாரிக்க அதிகாரிகள் முடிவு

நயன்தாரா-விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது. இது நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் தகுதி இல்லை என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். வாடகைத்தாய் தேர்விலும் ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்த பிரச்சினை சர்ச்சையானதும் விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மருத்துவ பணிகள் துறை 3 பேரை கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழுவினர் விசாரணையை தொடங்கிய நிலையில் நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், சட்டம் அதன் பிறகுதான் அமுலுக்கு வந்ததால் நயன்தாராவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது.

இதுதொடர்பாக மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நயன்தாரா இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை மிகப்பெரியதாக உருவெடுத்த்தால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிவாளம் போட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். நயன்தாரா படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பியதும் அவரிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள். அவர் தரப்பில் இருக்கும் ஆதாரங்களையும் கேட்க முடிவு செய்துள்ளார்கள்.