Tamilசெய்திகள்

வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் கொண்டு வர வேண்டும் – சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கொங்கு மண்டலம் சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள விஜயா சேஷாத்திரி மஹாலில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கலந்து கொண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் பலியான பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் கூட்ட அரங்கில் ஈழப்போர் மற்றும் மாவீரர்கள் வரலாறு காணொளி ஒளிபரப்பப்பட்டது. பின் மேடையில் விழுதுகள் என்ற புத்தகத்தை சீமான் வழங்க வக்கீல் தடா சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.

ஈழ விடுதலைப் போரில் சுமார் 100 பேரில் 80 பேருக்கு காலும், கைகளும், கண்களும் இல்லை. அவர்கள் தம் பிள்ளைகள் தமிழ் ஈழுத்தை பார்க்க வேண்டும் என்று போராடி தன் உறுப்புகளை துறந்தார்கள். புறநானூற்று வீரத்தை நாம் படித்தோம். ஆனால் புறநானூற்று வீரத்தை படைத்தவர் பிரபாகரன். மாவீரர்கள் தினத்தை கடைபிடிக்க வேண்டியது நமது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். 2 மாவட்ட நிலமே உள்ள ஈழ விடுதலைப் போரில் 50 ஆயிரம் மாவீரர்கள், 2 லட்சம் பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்தார்கள். ஈழ வரலாறு அம்மக்களின் கண்ணீர், மாவீரர்கள் ரத்தத்தால் எழுதப்பட்டது. மாவீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு. அவற்றை நாம் நினைவில் போற்றுவோம்.

ஈரான், ஈராக் போர், சோமாலியா என உலகில் மக்கள் எங்கு காயப்பட்டாலும் தமிழ் இனம் அழும். இந்த பண்பாடு வேறு எங்கும் இல்லை . இலங்கையில் ஒன்று தமிழ் இனம், மற்றொன்று சிங்கள இனம். பொதுவாக வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழ் ஈழம் கொண்டுவரவேண்டும். நான் பெரியவனா நீ பெரியவனா என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். உலகில் எவன் பெரியவன் என்றால் கீழே விழுந்து கிடக்கும் முடியாத ஒருவனை கை கொடுத்து தூக்கி விட குனிபவன் தான் மிகப்பெரியவன். அனைவரும் உயிர் நீத்தது எதற்காக என்றால் தமிழ் ஈழ மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக, தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக. தாய்மொழி தமிழில் இருக்க வேண்டும். தேசிய கீதம் தமிழில் ஒலிக்கும். சாதி, மதம், இனம் இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் மண்ணில்லாமல் வாழ முடியாது, தனக்கென தாய் நாடு வேண்டும்.

கடவுளை யார் வேண்டுமானாலும் வழிபடலாம், அதற்கு ஜாதி, மதம் தேவைப்படாது. இறைவனை வழிபட எதற்கு ஜாதி, மதம், இனம். நமது இலக்கு ஒன்றுதான், ஒட்டுமொத்த தமிழரின் இலக்ககு ஒன்றுதான். தாய்மொழி தமிழை ஒருபோதும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்து விடக்கூடாது. வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நமக்கான களம் என்பதை எண்ணி செயல்பட வேண்டும். நமது சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் மாவீரர்களின் மூச்சு நிறைந்திருக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில உழவர் பாசறை செயலாளர் சின்னண்னண், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற செயலாளர் காசிமன்னன், வீரபாண்டி தொகுதி துணை தலைவர் எருமாபாளையம் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.