வாக்கு எந்திரம் உடைப்பு – ஜன சேனா கட்சி வேட்பாளர் கைது

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில், ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள அறிவிப்பு நோட்டீசில், சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தொகுதிகளின் பெயர்கள் சரியாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குச்சாவடியில் இருந்த ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்துள்ளார். இதனால் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு வந்து வேட்பாளர் மதுசூதன் குப்தாவைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools