வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் குறிந்து வெளியான வீடியோவின் பின்னணி வெளியானது
இந்திய பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2019 இந்திய பொது தேர்தல் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயற்சி செய்ததாக செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
டி.என்.என். வொர்ல்டு எனும் பெயர் கொண்ட செய்தி நிறுவனம் சார்பில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல் அதிகாரியிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு பற்றி குற்றச்சாட்டு தெரிவித்தது.
இதேபோன்று 2019 பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதில் இருந்து நிலவும் சூழல் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் மே 19 ஆம் தேதிக்கு பின் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சற்று ஓய்வெடுக்கலாம் என்றும் இந்த சமயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற பா.ஜ.க. ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கிறார். மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
7.53 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் செய்தி தொகுப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. மேலும் அவர் வழங்கிய விவரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இவற்றை வைத்து பார்க்கும் போது வைரலான வீடியோ முற்றிலும் பொய் தகவல்களை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
வைரலான வீடியோவை வெளியிட்ட வலைதளம் டிரைகலர் நியூஸ் நெட்வொர்க் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த வலைதளத்தில் இந்திய பொது தேர்தல் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெற்று இருக்கின்றன.
இதே வலைதளத்தில் 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி வீடியோவில் அமெரிக்க வல்லுநர் ஒருவர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதுதவிர இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் பா.ஜ.க. கட்சி பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததாகவும் இதே தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த வலைதளத்திற்கென ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களும் இயங்கி வருகின்றன. இவற்றிலும் பா.ஜ.க. கட்சிக்கு எதிரான தகவல்கள் அதிகளவில் பதிவிடப்பட்டுள்ளன. டி.என்.என். வலைதளத்தின் உரிமையாளர் டயானா இரினா பிசின் ஆவார். இவர் ரோமானியாவை சேர்ந்தவர் ஆவார். நிறுவனத்தின் ஒற்றை பங்குதாரர் மற்றும் தலைவராக இவர் இருக்கிறார். அலுவலக முகவரி லண்டனில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முகவரி போலியானதாகும். இந்த முகவரியை பயன்படுத்த ஆண்டு கட்டணம் செலுத்தினாலே போதுமானது.