Tamilசெய்திகள்

வாக்காளர் பட்டியலில் இருந்து பெர்யர் நீக்கப்பட்டதால் சசிகலா வருத்தம்!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் சசிகலா வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா விடுதலை ஆகி இருந்தார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், ஒரு வார ஓய்வுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 8-ந் தேதி சென்னை திரும்பினார்.

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய சகிகலா திடீரென அரசியலை விட்டு ஒதுங்குவதாக கடந்த மாதம் அறிவித்தார். தற்போது கோவில் கோவிலாக சசிகலா சென்று வருகிறார்.

ஜெயலலிதா இருந்தவரை அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவும் வசித்து வந்ததால் இருவருக்கும் போயஸ் கார்டன் முகவரியிலேயே ஓட்டு இருந்தது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பது வழக்கம்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வசித்த வேதா இல்லம் தற்போது அரசுடைமை ஆக்கப்பட்டு விட்டதால், சகிகலா மற்றும் அவரது உறவினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்த்து அவருக்கு வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஆயிரம் விளக்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வைத்தியநாதன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், ஒருவர் ஜெயிலுக்கு சென்று வந்தார் என்பதற்காக அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது மாபெரும் அநீதியாகும்.

பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதுதான் மரபு. தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டதை அறிந்த சசிகலா மிகவும் வருத்தப்பட்டார்.

ஜனநாயக கடமையாற்ற கூட அனுமதி இல்லை என்றால் என்ன அர்த்தம் என்று சசிகலா மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை அறிந்து கடந்த மார்ச் 17-ந் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை நேரில் சந்தித்து முறையிட்டேன். ஆனால் அவர் எனக்கு உள்ள அதிகாரம் மார்ச் 9-ந் தேதியுடன் முடிந்துவிட்டது என்றார்.

9-ந் தேதிக்கு முன்பு வந்திருந்தால் சசிகலா பெயரை சேர்த்திருக்க முடியும். இப்போது என்னால் எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டார்.

தமிழகத்துக்கே உயர் அதிகாரி சத்ய பிரத சாகுதான். அவரை நேரில் பார்த்து முறையிட்டும் இனிமேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே சசிகலாவின் பெயரை நீக்கியவர்கள் மீது தேர்தல் கமி‌ஷன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தை நாங்கள் சும்மா விடமாட்டோம். நீதிமன்றம் வரை செல்வோம்.

இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.