ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர் ஷகீன்ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
வலது கால் முட்டி தசை நாரில் காயமடைந்த அவர் ஆசிய கோப்பை போட்டி தொடங்குவதற்குள் குணம் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் குணமடையாததால் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கிடையே ஷகீன்ஷா அப்ரிடி விலகல், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத்தான் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன்ஷா அப்ரிடி பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், வக்கார் யூனிஸ் கருத்துக்கு இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ஆசிய கோப்பை போட்டித்தொடரில் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இல்லாதது மற்ற அணிகளுக்கு நிம்மதியை தரும் என்று கூறியுள்ளார்.
மேலும் இர்பான் பதான் கூறும்போது, ஆசிய கோப்பை போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால் நான் 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கும் போது, விராட் கோலி ஆசிய கோப்பையில் சிறந்த பார்முக்கு திரும்ப வேண்டும். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கோலி சிறப்பாக விளையாடுபவர். எனவே இந்திய அணிக்கு சிறந்த பார்மில் உள்ள விராட்கோலி தேவை. இது அவருக்கும், இந்திய அணிக்கும் முக்கியமானது, என்றார்.