Tamilசெய்திகள்

வாகன வசதி இல்லாத மலைக்கிராமம்! – டோலி கட்டி பிணத்தை சுமந்து செல்லும் மக்கள்

வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் சுமார் 1,200 அடி உயரம் கொண்டது. இந்த மலை மீது 150 குடும்பங்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மலை கிராமத்திறகு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லை. அதேபோல் மருத்துவ வசதி, மின்சார வசதி என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் கண்டிராத நிலையில் உள்ளனர்.

இங்கு 5-ம் வகுப்பு வரை மட்டும் ஒரு பள்ளி உள்ளது. அதிலும் 3 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் வருவதாக கூறுகின்றனர்.

இதனால் அங்குள்ள வாலிபர்களும் சென்னை, பெங்களூரு என்று வேலை தேடி சென்று விடுகிறார்கள். இப்படி வஞ்சிக்கப்பட்டு வரும் மலைக்கிராம மக்கள் தினமும் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நெக்னாமலையை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் முனுசாமி என்கிற ரஜினி (வயது 27). என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் குழந்தைகளுடன் கோவையில் தங்கி சென்டரிங் தொழில் செய்து வந்தார்.

நேற்று கோவையில் கட்டிடத்திற்கான சென்டரிங் பிரிக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கி ரஜினி இறந்தார்.

அவரது உடலை சொந்த ஊரான நெக்னாமலைக்கு நேற்று அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். அப்போது மலைக் கிராமமான நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லாததால் ரஜினியின் உடலை டோலி கட்டி மலை மீது தூக்கி சென்றனர்.

கணவர் இறந்த சோகத்தில் மனைவி அனிதா மலை மீது நடக்க முடியாத நிலையில் மயங்கி விழுந்தார்.அவரையும் மற்றொரு டோலி கட்டி மலைக்கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் நெக்னாமலை கிராமத்திற்கு சாலை, மின்சார வசதி, மருத்துவ வசதி என்று செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *