இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாலை போக்குவரத்தில் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கருதும் நகரவாசிகள் தங்கள் பயணத்திற்கு ரெயில் போக்குவரத்தை தேர்ந்தெடுப்பது உண்டு.
ஆனால் உத்தரபிரதேசத்தில் சாலை போக்குவரத்தில் ஏற்பட்ட நெரிசலால், ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக ரெயில் செல்லும் போது அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலை போக்குவரத்தில் மாற்றங்களும், முன்னேற்பாடுகளும் செய்யப்படும். அதன்படி ரெயில் செல்லும் போது அருகே உள்ள சாலைகளில் வாகனங்கள் ரெயில் செல்லும் வரை நிறுத்தப்படும்.
ஆனால் வாரணாசியில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலில் சிக்கி நிற்கும் ரெயில், ஹாரன் எழுப்பியபடி இருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக ரெயில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் திணறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இதைப் பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒரு பயனர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ரெயிலை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா என கேட்டுள்ளார்.