வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் எப்படி இருக்க வேண்டும் – போக்குவரத்து போலீசார் அறிக்கை

சென்னை நகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

சென்னை நகரில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி தற்போது இல்லை. அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும், வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து வர்த்தக வாகனங்களிலும் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். 70 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், முன் எழுத்துக்கள் உயரம் 15 மி.மீட்டரிலும், அதன் தடிமன் 2.5 மி.மீட்டரிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அனைத்து இரு சக்கர வாகனங்களின் பின் எழுத்துக்கள் உயரம் 35 மி.மீட்டரிலும், தடிமன் 7 மி.மீட்டரிலும், இடைவெளி 5 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும்.

500 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களின் முன், பின் எழுத்துக்களின் உயரம் 35 மி.மீட்டரிலும், தடிமன் 7 மி.மீட்டரிலும், 5 மி.மீட்டர் இடைவெளி விட்டும் எழுத வேண்டும். 500 சி.சி.க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களில் முன், பின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எழுத்துக்கள் 40 மி.மீட்டர் உயரம் கொண்டதாகவும், தடிமன் 7 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும். அதில் இடைவெளி 5 மி.மீட்டர் போதும்.

இதர அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், முன், பின் நம்பர் பிளேட்டுகளில், உள்ள எழுத்துக்கள் 65 மி.மீட்டர் உயரத்திலும், தடிமன் 10 மி.மீட்டரிலும் இருக்கலாம். இடைவெளி 10 மி.மீட்டர் வேண்டும். 2019 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின் புதிதாக பதிவு செய்த வாகனங்கள் அனைத்திலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools