வழக்குக்கான செலவில் 60 சதவீதத்தை பிசிசிஐ-க்கு பிசிபி வழங்க வேண்டும் – ஐசிசி உத்தரவு
இந்திய கிரிக்கெட் வாரியம் – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையே கடந்த 2014-ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி பிசிசிஐ பாகிஸ்தான் கூட விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவு முயற்சி செய்தும், பிசிசிஐ இறங்கி வரவில்லை.
இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்காக பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் தொடரில் பங்கேற்க முடியும் என பிசிசிஐ கூறியிருந்தது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களைக் கட்டுப்படுத்தாது, மேலும் ஐசிசிக்கு வருவாய் கிடைப்பதற்கான வழிவகைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தரவில்லை. 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய அரசுதான் இருதரப்பு தொடர்களுக்கு அனுமதி தர வேண்டும் என பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது.
ஒப்பந்தத்தின்படி இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்காததால், பிசிசிஐ ரூ.500 கோடி இழப்பீடு தரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. ஐசிசி தகராறு தீர்ப்பாயத் தலைவர் மைக்கேல் பெலாஃப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதற்காக இரு வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வழக்காட நியமித்தன.
கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் மேல்முறையீடும் செய்ய முடியாதது எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கிற்கான செலவை பிசிபி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.