வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பாப் சகோதரிகள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. லிசா மற்றும் ஜெசிகா ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி பாப் பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா சகோதரிகள் சிட்னி விமான நிலையம் சென்று, குவாண்டாஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறினர்.

அப்போது விமான பணி பெண்ணுக்கும் லிசா-ஜெசிகா சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சகோதரிகள் இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறங்கும்படி விமான நிறுவன அதிகாரி அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்ததால் விமானத்துக்குள் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

லிசா-ஜெசிகா சகோதரிகள், விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாததால் அவர்கள் வெளியேற்றப்பட்டதாக குவாண்டாஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறும் லிசா-ஜெசிகா சகோதரிகள் ‘‘இந்த நிகழ்வு ஒரு வருத்தமளிக்கும் மற்றும் சங்கடமான அனுபவம்’’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news