X

வலிமையுடன் திரும்ப வருவேன் – ஸ்ரேயாஸ் அய்யர்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியின் போது காயமடைந்தார். பந்தை ‘டைவ்’ அடித்து தடுக்க முயற்சித்த போது இடது தோள்பட்டை தரையில் பலமாக இடித்தது. வலியால் துடித்த அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதித்த போது, தோள்பட்டை கொஞ்சம் இறங்கி இருப்பது தெரிய வந்தது. இந்திய அணியின் மருத்துவ குழுவினருடன் ஆலோசித்த ஸ்ரேயாஸ் அய்யர், காயத்துக்கு வருகிற 8-ந்தேதி ஆபரேஷன் செய்ய முடிவு செய்திருக்கிறார். ஆபரஷேன் நடந்தால் குறைந்தது 4 மாதங்கள் அவரால் விளையாட முடியாது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் அய்யர், வருகிற 9-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் முழுமையாக விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்.-ல் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியின் கொரோனா தடுப்பு வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இது மிகப்பெரிய பின்னடைவு. அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது உங்களுக்கு தெரியும். வலிமையான வீரராக மீண்டு வருவேன். விரைவில் களம் திரும்புவேன். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய வேண்டி ரசிகர்கள் அனுப்பிய வாழ்த்துகளை படித்தேன். உங்களது அன்பையும், ஆதரவையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.