Tamilசெய்திகள்

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்.

அப்போது அவர் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடுகளும் இல்லாமல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

அதன்படி நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.

இதில் பிரதான திட்டமாக கருணாநிதியின் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட ’வருமுன் காப்போம்’ மருத்துவ திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த திட்டத்தை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்றார்.

அங்கிருந்து கார் மூலம் வாழப்பாடி சென்ற அவர் அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் வருடத்திற்கு 1,240 இடங்களில் வருமுன் காப்போம் முகாம்களை நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், தோல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், நரம்பியல் மருத்துவர், சித்த மருத்துவர் ஆகிய 16 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள்.

முகாமில் பொதுமக்களை பரிசோதித்து உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் கண்டு பிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும்.

ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சர்க்கரை வியாதி, புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட வியாதிகள் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்க உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 385 வட்டாரங்கள் உள்ளன. இந்த வட்டாரங்களில் ஒரு வட்டாரத்துக்கு ஆண்டுக்கு 3 முகாம்கள் நடத்தினால் 1,150 முகாம்கள் நடத்தப்படும். 21 மாநகராட்சியில் ஒரு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 4 முகாம் வீதம் 80 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 15 மருத்துவ முகாம்கள் என தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் 1,240 மருத்துவ முகாம்கள் இதன் மூலம் நடத்தப்பட உள்ளன.

நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். நோய்கள் மக்களை தாக்காதவாறு தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின்படி இன்று முதல் இந்த திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.

வாழப்பாடியில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் கார்மேகம், கூடுதல் கலெக்டர் அப்துல் ரகுமான் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.