வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக காலகெடு நீட்டிப்பு இல்லை – மத்திய அரசு அறிவிப்பு
2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.
அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரி கணக்குளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்தது.
அதே போல இந்தாண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.