திருவள்ளூர் அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். காண்டிராக்டர். இன்று காலை அவர் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அதிகாலை 5 மணியளவில் ஒரு காரில் பெண் உள்பட 5 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சீருடையில் இருந்தார்.
அவர்கள் பாலமுருகனிடம், “நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். வீட்டில் சோதனையிட வேண்டும்” என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த கும்பல் பீரோவில் இருந்த 225 பவுன் நகை மற்றும் ரூ. 2.50 லட்சம் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் நகை-பணத்துக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து சரியான விளக்கம் கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் நகை-பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் காலை 10 மணியளவில் அங்கிருந்து சென்று விட்டனர். இதுபற்றி பாலமுருகன் வருமான வரித்துறை மற்றும் போலீசாரிடம் விசாரித்தபோது சோதனையில் ஈடுபட்டது போலி கும்பல் என்பது தெரிந்தது. அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை-பணத்தை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.