வரி ஏய்ப்பு செய்ததாக புகார் – எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஜி.எம். குழுமம் ஓட்டல், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.எம். தீம்பார்க் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. இதை தவிர கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட் ஒன்றும் உள்ளது. சென்னை மட்டுமின்றி நெல்லை, திண்டிவனம், காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எம்.ஜி.எம். குழுமம் முறையாக வருமான வரி கட்டவில்லை என்கிற புகார் வருமான வரித்துறைக்கு சென்றது.
இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் எம்.ஜி.எம். குழும நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டனர். இதன்படி 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று எம்.ஜி.எம். குழும அலுவலகங்களில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள எம்.ஜி.எம். சென்டர் என்ற பெயரிலான தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.எம். ஓட்டல் மற்றும் ரிசார்ட் மற்றும் தீம்பார்க் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இது தவிர நெல்லை, பெங்களூர் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் யாரையும் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதே போன்று சோதனை நடைபெறும் இடங்களில் இருந்து யாரையும் வெளியில் அனுமதிக்கவில்லை.
40 இடங்களிலும் எம்.ஜி.எம். நிறுவனங்களின் வரவு, செலவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று மாலை வரையில் சோதனை நடைபெறும் என்றும் அதன் பிறகு வருமான வரி சோதனை தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபலமான ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரி சோதனை 3 நாட்கள் வரையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே அமைந்துள்ள எம்.ஜி.எம் நட்சத்திர சொகுசு விடுதியில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் வரி ஏய்ப்பு தொடர்பாக அங்குள்ள ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.