X

வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. வழக்கமாக தினசரி 45 லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயம் கடந்த சில நாட்களாக 30 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ.30-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்து கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அங்கு நடைபெற்று வரும் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.46-க்கும் வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.