வயநாட்டில் 2 வது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. முண்டக்கை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் மரங்களும், பாறைகளும் அடித்து வரப்பட்டன.
கட்டுக்கடங்காத வெள்ளம், அங்கிருந்த வீடுகளையும், சாலைகளையும், பாலங்களையும் மூழ்கடித்தவாறு சென்றன. ஒரே நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பற்றி அறியாமல், பலர் தங்களது வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு தூங்கிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்களில் சிலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். சிலர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பியவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு பணிகளில் களமிறங்கியது. முண்டகை பகுதியில் மீட்பு பணிக்கு ஏற்பாடு நடந்து வந்த நேரத்தில், அதிகாலை 4 மணியளவில் அருகில் உள்ள சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அதிலும் ஏராளமான மக்கள் சிக்கினர்.
அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருந்ததாலும் அந்த பகுதி முழுவதும் மணலும், சகதியும், வெள்ளமுமாக காட்சியளித்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இருந்த இடங்கள் தரைமட்டமாகின. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
அவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்பு படையினர், குன்னூர் வெலிங்டனில் இருந்து ராணுவத்தினர், திருவனந்தபுரத்தில் இருந்து மாநில மீட்பு படையினரும், 130 ராணுவ வீரர்களும், பெங்களூருவில் இருந்து 150 ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர். அவர்கள் ஆங்காங்கே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எனினும் கடும் சிரமங்களுக்கிடையே மீட்பு பணி தொடர்ந்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் 143 பேர் பலியானார்கள். அவர்களில் 39 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது. இன்றும் 2-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு வந்தடைந்தனர்.
முன்னதாக, வயநாடு வந்த தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.