நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடரமுடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.
வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளதால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி யாக தொடர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்பட்சத்தில் அங்கு ராகுலின் தங்கையும் காங்கிரஸின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக வாரணாசி தொகுதியில் மோடி கடந்த தேர்தலை விட குறைத்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளதை விமர்சித்திருந்த ராகுல் காந்தி, வலுவான எதிர்ப்பு எதிர்ப்பு இல்லாமலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற மோடி, வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.