கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார். வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்.
நிலச்சரிவால் சேதமடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் மற்றும் கேரள முதல்வரும் இருந்தனர். சூரல்மலை, வெள்ளிமலை, முண்டகைப் பகுதிகளில் பாதிகப்புகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டடார்.
சூரல்மலையில் ராணுவத்தால் கட்டப்பட்ட பெய்லி பாலத்தையும் பிரதமர் மோடி பார்வையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மேப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபியும் உடன் செல்கிறார்.
ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தபோது, நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துரைத்தார்.