வயநாடு தொகுதியில் நாளை ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் இருந்து எம்.பி. ஆன அவர் அங்கு 4-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் ராகுல் தென் இந்தியாவிலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூற முதலில் ராகுல் அதை ஏற்க தயங்கினார். ஆனால் தென்இந்தியாவில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அது காங்கிரசுக்கு எழுச்சியாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ராகுல் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுவார் என்று கடந்த 31-ந்தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 3-வது கட்டமான ஏப்ரல் 23-ந்தேதி அன்று வயநாடு தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அமேதி தொகுதியில் 5-வது கட்டமான மே மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் வருகிற 10-ந்தேதி தான் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதன்பிறகு ஒரு வாரம் அவகாசம் இருப்பதால் அங்கு ஏப்ரல் 3-வது வாரம் ராகுல் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயநாடு தொகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி மனு தாக்கல் தொடங்கி விட்டது. மனுதாக்கலுக்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். எனவே நாளை வயநாடு தொகுதியில் ராகுல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
ராகுல்காந்தி இன்று அசாம் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்றுள்ளார். இன்று (புதன்கிழமை) இரவு அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்து சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்காவும் வருகிறார்.
ராகுல்-பிரியங்கா இருவரும் கரிப்பூரில் உள்ள கோழிக் கோடு விமான நிலையத்துக்கு எத்தனை மணிக்கு வந்து இறங்குவார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர்களது வருகை மற்றும் சுற்றுப் பயண விவரங்கள் அனைத்தும் கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கூட தெரியாத வகையில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
ராகுல் – பிரியங்கா இருவரும் இன்று இரவு எங்கு தங்குவார்கள் என்பதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதுபோல மலப்புரம் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
எனவே கோழிக்கோடு- மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் ராகுல்-பிரியங்கா தங்குவார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்காக 3 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவர்கள் கோழிக்கோட்டில் தங்க அதிக வாய்ப்பு உள்ளது.
வயநாடு பாராளுமன்ற தொகுதியில் 7 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. 80 சதவீதம் மலைப்பகுதியை கொண்ட வயநாடு தொகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் அங்கு மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜலீல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த 2016-ம் ஆண்டும் நிலம்பூர் வனப்பகுதியில் தேவராஜன், காவேரி என்ற 2 மாவோயிஸ்டு தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எனவே மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ராகுல்-பிரியங்கா இருவருக்கும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவர்களது பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து சிறப்பு அதிரடிப்படை உதவி ஐ.ஜி. குர்மத் டூர்ஜா தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் வயநாடு வந்துள்ளனர். அவர்கள் கேரள மாநில போலீசார், பொதுப் பணித்துறையினர், தீயணைப்பு படையினர், சுகாதாரத்துறையினர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கோழிக்கோட்டில் இருந்து வயநாடுக்கு ராகுலும், பிரியங்காவும் காரில் செல்ல வேண்டாம் என்று உளவுத்துறை கேட்டுக் கொண்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோழிக்கோட்டில் இருந்து வயநாடுக்கு ஹெலிகாப்டரில் வர உள்ளனர். வயநாட்டில் உள்ள எஸ்.கே.எம்.ஜே. உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் ராகுலின் ஹெலிகாப்டர் இறங்க புதிய ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து வயநாடு கலெக்டர் அலுவலகத்துக்கு ராகுலும், பிரியங்காவும் காரில் செல்ல உள்ளனர். இந்த வழிநெடுக சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர ராகுல்-பிரியங்கா பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து தனி பாதுகாப்பு படையும் வர வழைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்தவர்களும் வயநாடு பகுதியில் உள்ள மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் நகர்வை கண்காணித்தப்படி உள்ளனர். வனப் பகுதியில் உள்ள கிராமங்கள் கடந்த 2 நாட்களாக தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வயநாடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராகுல்-பிரியங்கா இருவரும் இன்று இரவு கோழிக்கோடு வந்த பிறகு அவர்கள் செல்லும் இடங்கள் பற்றி இன்று காலை முதல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல்வாஸ்னிக், வேணுகோபால் இருவரும் ஆய்வு செய்தனர். அவர்கள் இருவருக்கும் தான் ராகுல்-பிரியங்காவின் சுற்றுப்பயணம் முழு விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ராகுலின் இன்றைய பயணத்தில் தாமதம் ஏற்பட்டால் நாளை அதிகாலையிலேயே அவர் கோழிக்கோடு வந்துவிடுவார் என்று கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி தெரிவித்தார்.
வயநாடு பள்ளிக்கூட மைதானத்தில் தரை இறங்கிய பிறகு ராகுல் நேரடியாக வயநாடு கலெக்டர் அலுவலகத்துக்கு செல்கிறார். நாளை பகல் 11.15 மணி அளவில் தனது வேட்புமனுவை வயநாடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அஜய்குமாரிடம் தாக்கல் செய்வார்.
ராகுல் மனுதாக்கல் செய்யும்போது பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, உம்மன் சாண்டி, முகுல்வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடன் இருப்பார்கள். உடல்நலக்குறைவு காரணமாக சோனியா வரமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டதுமே கேரள மாநில காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ராகுலை ஆதரித்து நேற்று முன்தினம் மிகப்பிரமாண்டமான பேரணியும் நடத்தினார்கள்.
அவர்களை மேலும் உற்சாகப்படுத்த வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு நாளை காலை கல்பேட்டா நகரில் மிகப்பெரிய ரோடு ஷோ நடத்த ராகுல் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கேரள மாநில போலீசாரின் எச்சரிக்கை தொடர்ந்து ராகுல் தனது ரோடுஷோ பேரணியை ரத்து செய்து விட்டார்.
11.15 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்து முடித்த பிறகு அங்குள்ள ஒரு இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் வயநாடு தொகுதியில் எந்தெந்த தேதிகளில் பிரசாரம் செய்வது என்பது பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.
அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மதியம் 1 மணி அளவில் வயநாடு தொகுதிக்குட்பட்ட ஏதாவது ஒரு பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ராகுல் முடிவு செய்துள்ளார். பிரியங்காவும் அந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முடித்த பிறகு ராகுல்-பிரியங்கா இருவரும் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளனர்.