X

வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அனைத்து பிரதான கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் வயநாடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்க உள்ளது.

அதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நேற்று வெளியிட்டது. அதன்படி ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். அவர் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா கூறியிருப்பதாவது:-

வயநாடு தொகுதியில் போட்டியிட கொடுத்திருப்பது ஒரு பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்துள்ளது. இந்த முறை மக்கள் ஆதரவை நாங்கள் வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். நான் எப்போதும் ஆதரவுடன் இருப்பேன். நான் அரசியல் வாழ்வில் குழந்தை படிகளை கற்றுக்கொண்ட இடம் வயநாடு.

எங்களது கட்சி இவ்வளவு காலமாக இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் கேரளாவில் 4 தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறையும் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி. அதில் புதிதாக எதுவும் இல்லை. அந்த நிலைமை அப்படியே உள்ளது. எதுவும் மாறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.