வயநாடு தொகுதிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உண்டு.
ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தின்போது நடந்த குண்டுவெடிப்பில் பலியானார். அப்போது அவரது அஸ்தி வயநாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு மகாவிஷ்ணு கோவிலையொட்டிய பாபநாசினி ஆற்றில் அந்த அஸ்தி கரைக்கப்பட்டது.
இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா நேற்று நினைவுகூர்ந்து, ராகுல் காந்திக்கும், வயநாட்டுக்கும் உணர்வுபூர்வமான உறவு உண்டு என்பதை வெளிப்படுத்தினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “ராஜீவ் காந்தியின் அஸ்தி இங்கே எடுத்து வரப்பட்டு பாபநாசினி ஆற்றில் கரைக்கப்பட்டபோது, அப்போதைய கேரள முதல்-மந்திரி கருணாகரன், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் நானும் உடன் இருந்தேன்” என நினைவுகூர்ந்தார்.
ராகுல் காந்தி, அடுத்த முறை அங்கு பிரசாரத்துக்கு வருகிறபோது வயநாடு பகுதியில் உள்ள புனித தலங்களுக்கு செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.