X

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாம் வென்றெடுத்தே தீருவோம் – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகில் எந்த நாடாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் நீதி கேட்டு போராடுவோருக்கு முதலில் பரிசாக கிடைப்பது துப்பாக்கிக் குண்டுகள் தான். குண்டுகளை மார்பில் தாங்கியும், குண்டாந்தடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியும் விதையாய் மண்ணில் புதைந்தவர்கள் தான் புரட்சிச் செடியை துளிர்க்கச் செய்து சமூகநீதி உள்ளிட்ட நீதிகளை மலரச் செய்கின்றனர் என்பது தான் வரலாறு.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மறுக்கப்பட்ட உரிமைகளை கேட்டு போராடியதற்காக காவல் துறையினரால் கொல்லப்பட்டு, இந்தியாவில் ஈடு, இணையற்ற சமூகநீதி வரலாற்றை படைத்த 21 தீயாகிகளின் 36-ம் ஆண்டு நினைவு நாளை கடை பிடிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.

2022, 2023 ஆகிய ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. நமது உரிமையான சமூகநீதியை வென்றெடுப்பதில் செய்யப்படும் காலதாமதம் கோபத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை தான். வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் நான் மீண்டும், மீண்டும் அளிக்கும் வாக்குறுதி ஒன்று தான். ” பாட்டாளி மக்களான வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்காமல் ஓய மாட்டேன்” என்பது தான். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை போராட்டம் நடத்தாமல் வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை நான் அறிவேன்.

இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுப்பதற்கான இலக்கை நோக்கிய பயணத்தில் நமக்கு வழிகாட்டும் விண்மீன்களாக ஈகியர்கள் இருப்பர். அதனால், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த கவலை பாட்டாளி சொந்தங்களுக்கு தேவையில்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாம் வென்றெடுத்தே தீருவோம். இது உறுதி.

இந்த உணர்வுடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப் படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும். அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீர வணக்கம் என்ற பதாகையை அமைத்து மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags: tamil news