அதிவேகத்தில், உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசு பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 ரெயில்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
வந்தே பாரத் ரெயில்களில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த வேகமும், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவும் 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளுடன் சரியாகப் பொருந்துகிறது.
இந்திய ரெயில்வேயை நவீனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படாதது வருத்தம் அளிக்கிறது. ஆனால் தற்போது நமது அரசாங்கம் இந்திய ரெயில்வேயின் மாற்றத்திற்காக பாடுபடுகிறது. ரெயில்வேயில் ஒரே நாளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் என தெரிவித்தார்.