X

வந்தே பாரத் ரெயிலை விரும்பாத பயணிகள்! – டிக்கெட் விலையை குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு

இந்திய ரெயில்வேத்துறையால் வந்தே பாரத் ரெயில் முக்கியமான நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஐந்து வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வருகிற 7-ந்தேதி சென்னை- விஜயவாடா ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் ரெயில் அதிவேகமாக செல்லக் கூடியதாகவும், பெரும்பாலான இடங்களில் நின்று செல்லாதது என்பதாலும் பயண நேரம் குறையும் என்று ரெயில்வே அறிவித்தது. மேலும், அதிநவீன வசதியுடன் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் பயணம் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரும்பாலான பயணிகள் இந்த ரெயிலை விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருக்கிறது. இதனால் கட்டணத்தை குறைத்து பயணிகளின் வருகையை அதிகரிக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தூர்- போபால், போபால்- ஜபால்புர், நாக்பூர்-பிலாஸ்புர் உள்ளிட்ட குறுகிய தூரம் செல்லும் ரெயில்களின் கட்டணத் தொகை குறைய வாய்ப்புள்ளது. போபால்-ஜபால்புர் வந்தே பாரத் ரெயிலில் 29 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தூர்- போபால் ரெயில் 21 சதவீதம்தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. சேர் கார் டிக்கட் 950 ரூபாய், எக்சிக்யூட்டிவ் சேர் கார் டிக்கெட் 1525 ரூபாய் ஆகியும். தற்போது இந்தியாவில் 46 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம்- காசர்கோடு, காந்திநகர்- மும்பை சென்ட்ரல் ரெயிலில் அதிக பயணிகள் பயணம் செய்வதாக ரெயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே எக்ஸ்பிரஸ் ரெயிலைவிட, குறைவான வேகத்தில் செல்வது போன்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Tags: tamil news